பாகுபலி கதாபாத்திரம் தோனியைப்போல இருக்கிறதா? - ராஜமவுலி அளித்த சுவாரஸ்ய பதில்
|தற்போது பாகுபலி படத்தின் முன் கதை, அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக உருவாகி உள்ளது.
சென்னை,
ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் பாகுபலி. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படம், உலக அளவில் ரூ.600 கோடியைக் கடந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017-ம் ஆண்டு வெளியாகி முதல் பாகத்தை விட அதிக வசூல் ஈட்டியது. உலகமுழுவதும் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
தற்போது பாகுபலி படத்தின் முன் கதை, அனிமேஷன் வடிவில் வெப் சீரிஸாக உருவாகி உள்ளது. 'பாகுபலி: கிரவுன் ஆப் பிளட்' என்ற தலைப்பில் வருகிற 17-ம் தேதி டிஸ்னி- ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.
இந்த நிலையில், இயக்குனர் ராஜமவுலி ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் இந்த சீரிஸில் வரும் பாகுபலி தோனியைப்போல உள்ளதாக கேள்வி எழுப்பினர். அதற்கு ராஜமவுலி புன்னகை செய்து சுவாரஸ்யமான பதில் ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது, 'கதாபாத்திரங்களை உருவாக்கியவர்களும், என்னைப்போலவே தோனி ரசிகர்களாக இருக்கலாம்', இவ்வாறு கூறினார்.