படப்பிடிப்பில் நடிகர் யாஷ் தவறாக நடந்தாரா? நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம்
|யாஷ் தன்னை துன்புறுத்தியதாக பரவும் வதந்தி தகவல் ஒன்றிற்கு நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகர் யாஷ் மற்றும் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஆகிய இருவரும் கே.ஜி.எப். படத்தின் இரண்டு பாகங்களிலும் ஜோடியாக நடித்து இந்திய அளவில் பிரபலமானார்கள். இந்த படங்களின் மூலம் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு அனைத்து மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகள் குவிகின்றன. யாஷ்க்கு பெரிய அளவில் ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். தமிழில் விக்ரமுடன் கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து இருந்தார். இந்த நிலையில் கே.ஜி.எப். படப்பிடிப்பில் ஸ்ரீநிதி ஷெட்டியை யாஷ் துன்புறுத்தி தொல்லை கொடுத்ததாகவும் தவறாக நடந்ததாகவும் இதனால் அவரோடு இனிமேல் நடிப்பது இல்லை என்று ஸ்ரீநிதி ஷெட்டி முடிவு செய்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு ஸ்ரீநிதி ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, "சிலர் சமூக ஊடகங்களில் தவறான தகவலை பரப்புகின்றனர். யாஷ் சிறந்த மனிதர். அவர் எப்போதும் எனக்கு தொந்தரவு கொடுத்ததே இல்லை. படப்பிடிப்பில் யாஷ்சுடன் நடிக்கும்போது எனக்கு எந்த அசவுகரியங்களும் ஏற்படவில்லை.
யாஷ் ஒரு ஜென்டில்மேன். அவரோடு இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவமாகவே இருந்தது. நான் எப்போதும் யாஷ் ரசிகையாகவே இருப்பேன்''. என்றார்.