அதர்வா ஜோடியாக ஸ்ரீதேவி மகள்...!
|தமிழ் படத்தில் குஷி கபூர் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழ், இந்தியில் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஜான்வி ஏற்கனவே இந்தி படங்களில் நடித்துள்ளார். தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இவரது தந்தை போனிகபூர் தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, துணிவு, வலிமை படங்களை தயாரித்துள்ளார்.
இரண்டாவது மகளான குஷி கபூரும் இந்தி படமொன்றில் நடிக்கிறார். இந்த நிலையில் தமிழ் படத்திலும் குஷி கபூர் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவனின் உதவியாளர் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழில் வெற்றி பெற்ற லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கிலும் குஷி நடிக்க உள்ளார். ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பையா படத்தின் இரண்டாம் பாகத்தில் ஜான்வி நடிக்க இருப்பதாக வெளியான தகவலை போனிகபூர் மறுத்து இருந்தார்.