ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாள்; 'டூடுள்' வெளியிட்டு கூகுள் வாழ்த்து
|ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளான இன்று, கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் 'டூடுள்' வெளியிட்டுள்ளது.
மும்பை,
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய நடிகை ஸ்ரீதேவி, பின்னர் கதாநாயகியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இன்றளவும் இவரது எந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் பழைய நினைவுகள் ஏற்படும்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி 1963-ம் ஆண்டு ஆகஸ்ட் 13-ம் நாள் பிறந்தார். சிறுவயது முதலே நடிப்பின்மீது ஆர்வம் கொண்ட ஸ்ரீதேவி, 4 வயதில் கந்தன் கருணை படத்தில் குழந்தை பாத்திரத்தில் நடித்தார். படிப்படியாக முன்னேறி கதாநாயகி ஆனார். இவர் திரையுலகில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
பாலிவுட் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவி, 1976-ல் கே.பாலசந்தரின் 'மூன்று முடிச்சு' படத்திற்காக முதல்முறையாக தேசிய விருது பெற்றார். நடிகை ஸ்ரீதேவிக்கு 2017-ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. அப்போது அவர் நடித்த 'மாம்' திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
நடிகை ஸ்ரீதேவியின் 60-வது பிறந்தநாளையொட்டி அவரின் படத்தை டூடுளாக வடிவமைத்து கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வைத்து வாழ்த்து தெரிவித்து உள்ளது.