ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியீடு
|பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா பிறந்த நாளில் புதிய பட போஸ்டர் வெளியாகியுள்ளது.
கன்னடத்தில் இருந்து தன்னுடைய சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய நடிகை ஸ்ரீலீலா, தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகாவின் இடத்தை கைப்பற்றி இருக்கிறார். தெலுங்கில் தற்போது அவரது கைவசம் நிறைய படங்கள் இருக்கின்றன. அத்தனைப் படங்களும் தெலுங்கு சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களின் படங்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் பிறந்த இந்தியரான ஸ்ரீலீலா, வளர்ந்தது, படித்தது எல்லாம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்தான்.
ஸ்ரீலீலாவின் முதல் படமான 'கிஸ்' திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படம் வெளியானபோது, அவரது வயது 19 தான். முதல் படமே 100 நாட்கள் ஓடி மிகப்பெரிய வெற்றியை அளித்தது. இதையடுத்து அவருக்கு கன்னடத்தில் வாய்ப்புகள் வந்தன. மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் ஜோடியாக 'ஜேம்ஸ்' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதற்கிடையில் 2021-ம் ஆண்டு 'பெல்லி சான்டட்' என்ற படத்தின் மூலமாக தெலுங்கில் அறிமுகமானார் ஸ்ரீலீலா. இரண்டாவது படமே, தெலுங்கின் முன்னணி நடிகரான ரவிதேஜாவுடன் ஒப்பந்தமானது. 'தமாகா ' படத்தில் நடித்து கவனம் பெற்றவருக்கு அப்படத்தில் இடம்பெற்ற பல்சர் பாடல் பிரபலமாக்கியது.
சிறுவயதிலிருந்தே பரதநாட்டியம் ஆடிப்பழகிய ஸ்ரீலீலா நடனமாடினால் உடல் வில்லாக மாறிவிடுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்க, லீலாவின் சினிமா வாழ்க்கை புயல் வேகத்தில் மாறியது. தற்போது பவன்கல்யாண், நந்தமுரி பால கிருஷ்ணா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், குண்டூர் காரம் படத்தில் நடித்தார். அதிலும், 'குர்ச்சி மாடதபெட்டி' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்தார்.
சில தமிழ் படங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் 23-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ரீ லீலாவுக்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நிதினுடன் ராபின்ஹுட் படத்தில் நடிக்கிறார். இதில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீலீலாவின் கதாபாத்திர பெயர் நீரா வாசுதேவ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. உயரம் எவ்வளவு எனத் தெரியவில்லை. ஆனால் தலைக்கணம் அதிகமுள்ள கதாபாத்திரம் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப்படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.