"தற்கொலைக்கு முயன்றதாக வதந்தியை பரப்புவதா?" - நடிகை ரோஜா கண்டனம்
|பொய் செய்திகளை பரப்பும் சில யூடியூப் சேனல்களை வன்மையாக கண்டிப்பதாக ரோஜா தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஆந்திர அமைச்சரும் நடிகையுமான ரோஜா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்யநாராயணா நான் ஆபாச படங்களில் நடித்தேன் என்பது போல் பேசினார். அதற்காக என் சக நடிகைகள் மற்றும் மாநிலம் முழுவதும் பெண்கள் கண்டனம் தெரிவித்தார்கள்.
பண்டாரு சத்யநாராயணாவை சட்டப்படி எதிர்கொள்வேன். இந்த விஷயத்தை ஜனாதிபதியின் பார்வைக்கு கொண்டு சென்று நீதி கேட்பேன். இனி எந்த ஆணும் ஒரு பெண்ணைப் பற்றி தகாத வார்த்தைகளை பேச வேண்டும் என்றால் 100 முறை யோசிக்க வேண்டும். இதற்காக எவ்வளவு தூரம் போராடவும் தயங்கமாட்டேன். இதோடு இது போன்ற பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஆனால் சில யூடியூப் சேனல்களில் நான் தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டதாகவும் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிகிச்சை எடுத்து வருவதாகவும் செய்திகளை ஒளிபரப்பி வருகிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் கோழை அல்ல. எந்த பிரச்சினைக்கும் பின்வாங்குபவள் அல்ல. எதிர்த்து போராடும் குணம் என் பிறப்பிலேயே உள்ளது. என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. எனவே இது போன்ற பொய் வதந்திகளை பரப்பும் யூடியூப் சேனல்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
தொடர்ந்து நான் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, நல திட்ட உதவிகளை வழங்கிக் கொண்டு, பொதுமக்களிடையே தான் இருக்கிறேன்''
இவ்வாறு ரோஜா கூறினார்.