'கனெக்ட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி - நயன்தாராவை ஆரவாரத்துடன் வரவேற்ற ரசிகர்கள்
|புதிய முயற்சி என்றால் எப்போதும் விவாதங்கள் இருக்கத்தான் செய்யும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்தார்.
சென்னை,
இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள 'கனெக்ட்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி சென்னை தி-நகரில் உள்ள திரையரங்கில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகர் வினய், ஜி.பி.முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விக்னேஷ் சிவன் வந்த சிறிது நேரத்திற்குப் பிறகு நயன்தாரா தனியாக காரில் வந்திறங்கினார். அதுவரை அவரைக் காண்பதற்காக காத்திருந்த ரசிகர்கள், நயன்தாராவை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இந்த கனெக்ட் திரைப்படம் முதல் முறையாக இடைவேளை இல்லாமல் 99 நிமிடங்கள் ஓடக்கூடிய திகில் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இடைவேளை இல்லாமல் இத்திரைப்படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் சிவன், சிறிய திரையரங்குகளில் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப சமரசம் செய்து கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் புதிய முயற்சி என்றால் எப்போதும் விவாதங்கள் இருக்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்ட அவர், 'கனெக்ட்' திரைப்படம் வரும் 22-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.