< Back
சினிமா செய்திகள்
ஆம் ஆத்மி எம்.பி.யை மணக்கிறார், நடிகை பரினீதி சோப்ரா- 13ஆம் தேதி டெல்லியில் நிச்சயதார்த்தம்
சினிமா செய்திகள்

ஆம் ஆத்மி எம்.பி.யை மணக்கிறார், நடிகை பரினீதி சோப்ரா- 13ஆம் தேதி டெல்லியில் நிச்சயதார்த்தம்

தினத்தந்தி
|
10 May 2023 3:40 AM IST

இந்தி நடிகை பரினீதி சோப்ரா, ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தாவை மணக்கிறார். இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் 13-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

புதுடெல்லி,

பிரபல இந்தி நடிகை பரினீதி சோப்ராவும், ஆம் ஆத்மி கட்சியின் இளம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ராகவ் சத்தாவும் காதலித்து வருவதாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து வதந்திகள் வெளியாகி வந்தன.

அவர்கள் மும்பையில் ஒன்றாக காணப்பட்டதை தொடர்ந்து இந்த வதந்தி பரவியது. பின்னர், ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் அரோரா, இந்த ஜோடிக்கு 'டுவிட்டர்' மூலம் வாழ்த்து தெரிவித்ததால், வதந்தி மேலும் அதிகரித்தது.

நிச்சயதார்த்தம்

இந்நிலையில், பரினீதி சோப்ரா-ராகவ் சத்தா திருமண செய்தி உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு 13-ந் தேதி டெல்லியில் திருமண நிச்சயதார்த்தம் நடப்பதாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த சில நாட்களாக மும்பையில் இருந்த இருவரும் நேற்று விமானம் மூலம் டெல்லி திரும்பினர். நிச்சயதார்த்தம் முடிவடையும் வரை, பரினீதி சோப்ரா டெல்லியிலேயே இருப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

உறுதிப்படுத்த மறுப்பு

நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கான இடத்தை இறுதி செய்யும் பணியில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். நிகழ்ச்சியில், குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமான நண்பர்கள் என சுமார் 150 பேர் கலந்து கொள்கிறார்கள்.

ஆனால், பரினீதி சோப்ராவும், ராகவ் சத்தாவும் தங்களது நிச்சயதார்த்த தகவலை இன்னும் உறுதி செய்யவில்லை. மும்பையில் நிருபர்கள் கேட்டபோது பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

மேலும் செய்திகள்