விரைவில்... ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கும் அதிதி ஷங்கர்?
|இந்தியன் 3, கேம் ஜேஞ்சர் என ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன.
சென்னை,
தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இவர் இயக்கும் படங்களின் காட்சிகள் பிரமிப்பூட்டத்தக்க வகையில் இருக்கும்.
தற்போது இவர், 'இந்தியன்-2' படத்தை இயக்கியுள்ளார். இதில், கமல்ஹாசன், சித்தார்த், ரகுல் பிரீத் சிங் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படம் கடந்த 12-ந் தேதி வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. இந்தியன்-2 படத்தை தொடர்ந்து இந்தியன் 3, கேம் ஜேஞ்சர் என ஷங்கர் இயக்கத்தில் அடுத்தடுத்து படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் இயக்குனர் ஷங்கரிடம் 'அதிதி ஷங்கரை எப்போது உங்களுடைய படத்தில் பார்க்கலாம்' என கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு இயக்குனர் ஷங்கர் "அவருக்கென்றே ஒரு கதாபாத்திரம் ரெடியாக உள்ளது. ஒரு தந்தையாக இல்லாமல், இயக்குனராக அதிதியிடம் நடிகைக்கான அம்சங்கள் இருக்கின்றன என்பதை அறிந்துள்ளேன். ஆகையால், நிச்சயமாக விரைவில் என்னுடைய படத்தில் அவரை பார்க்கலாம்" என பதிலளித்தார்.