வில்லியாக சோனியா அகர்வால்
|கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோல் கதாநாயகிகளும் வில்லியாக மாறி வருகிறார்கள். ஜோதிகா, ரம்யா கிருஷ்ணன், ரீமா சென் உள்ளிட்டோர் எதிர்மறை வேடங்களில் நடித்து உள்ளனர். திரிஷா கொடி படத்தில் வில்லியாக வந்தார். சிம்ரன் சீமராஜா படத்தில் வில்லியாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நிறைய படங்களில் வில்லி வேடங்களை ஏற்று வருகிறார்.
இந்த நிலையில் சோனியா அகர்வாலும் வில்லியாக நடிக்க வந்துள்ளார். இவர் காதல் கொண்டேன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நடித்து இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.ஜெயகிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் 'உன்னால் என்னால்' என்ற படத்தில் வில்லியாக நடிக்கிறார். ரியல் எஸ்டேட் மோசடிகளை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
இதில் பொதுமக்களை ஏமாற்றி மோசடி செய்யும் கும்பலின் தலைவியாக சோனியா அகர்வால் நடிக்கிறார். சோனியா அகர்வால் வில்லியாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஜெகா, கே.ஆர். ஜெயகிருஷ்ணா, உமேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டெல்லி கணேஷ், ஆர்.சுந்தரராஜன், மோனிகா ஆகியோரும் உள்ளனர். ராஜேந்திரன் சுப்பையா தயாரித்துள்ளார்.