< Back
சினிமா செய்திகள்
எனது பெயரில் நடக்கும் நூதன மோசடி.. சின்னத்திரை நடிகை ஆலியா மானசா எச்சரிக்கை
சினிமா செய்திகள்

'எனது பெயரில் நடக்கும் நூதன மோசடி..' சின்னத்திரை நடிகை ஆலியா மானசா எச்சரிக்கை

தினத்தந்தி
|
21 Feb 2024 9:48 PM IST

தனது பெயரில் நடந்து வரும் மோசடி குறித்து நடிகை ஆலியா மானசா ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

சென்னை,

சின்னத்திரை நடிகை ஆலியா மானசா, தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானார். இவர் தன்னுடன் நடித்த சக நடிகரான சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில் இந்த ஜோடி விவாகரத்து செய்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், தனது கணவருடன் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், ஆலியா மானசாவின் பெயரில் மற்றொரு நூதன மோசடி அரங்கேறியுள்ளது. இதன்படி பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு இணையதள பக்கத்திற்கான 'லிங்க்' ஒன்று பரவி வருகிறது. அந்த இணையதள பக்கம் ஒரு பிரபல செய்தி நிறுவனத்தின் பெயரில் உருவாகப்பட்டுள்ளது.

அந்த இணையதள பக்கத்தில், ஆலியா மானசா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது தனது வருமானம் குறித்து ரகசிய தகவல் ஒன்றை வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் ஆலியா மானசாவைப் போல் சிறிய தொகையை முதலீடு செய்து பெரிய அளவில் சம்பாதிக்க வேண்டும் என்றால் மற்றொரு லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை ஆலியா மானசா இதில் முதலீடு செய்துதான் பெரிய அளவில் சம்பாதித்ததாகவும் அந்த இணையதள பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனைக் கண்டதும் ஆலியா மானசாவின் ரசிகர்களும், நண்பர்களும் குழப்பமடைந்து அவரிடம் இதுபற்றி கேட்டுள்ளனர். இந்த நிலையில், தனது பெயரில் நடந்து வரும் மோசடி குறித்து நடிகை ஆலியா மானசா ரசிகர்களை எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் எல்லோரையும் போல் நேர்மையான முறையில் உழைத்து சம்பாதித்து வருகிறேன். புதிய வீடு, கார் உள்ளிட்டவற்றை வங்கிக் கடன் மூலம் வாங்கி, அந்த கடன் தொகையையும் செலுத்தி வருகிறேன்.

நான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எனது வருமானம் குறித்து ரகசிய தகவலை வெளியிட்டதாக பரவி வரும் தகவல் முற்றிலும் போலியானது. இதனை நம்பி யாரும் அதில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்