வெப் தொடரில் எஸ்.ஜே.சூர்யா
|பிரபல டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெப் தொடரில் நடித்துள்ளார்.
ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதால் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் வெப் தொடர்களுக்கு மாறி வருகிறார்கள்.
தற்போது பிரபல டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யாவும் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் வெப் தொடரில் நடித்துள்ளார். 'வதந்தி: தி பேபிள் ஆப் வெலோனி' என்ற அந்த வெப்தொடரில் அவருடன் நாசர், விவேக் பிரசன்னா, லைலா, குமரன் தங்கராஜன், ஸ்மிருதி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த தொடரை ஏற்கனவே சுழல் என்ற வெப் தொடரை எடுத்த டைரக்டர்கள் புஷ்கர், காயத்ரி தயாரித்துள்ளனர். வெப் தொடரில் நடித்தது குறித்து எஸ்.ஜே.சூர்யா கூறும்போது, ''திறமையான இயக்குனர்களின் படைப்பின் மூலமாகத்தான், ஒரு நடிகர் சிறந்த நடிகராக புகழ்பெற முடியும். அந்த வகையில் என்னுடைய உதவியாளர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் வெப் தொடரில் முதன் முதலாக நடித்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த தொடர் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயர் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்' என்றார்.