மீண்டும் விஜய்க்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா
|விஜய் லியோ படத்தை முடித்து விட்டு வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்து உள்ளனர். இது விஜய்க்கு 68-வது படம். இந்த படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. இந்த படம் விஜய்க்கு ஏற்ற மாஸ் மசாலா விஷயங்களுடன் எனது ஸ்டைலில் இருக்கும் என்று வெங்கட் பிரபு தெரிவித்து இருக்கிறார்.
இதில் விஜய்க்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தில் வில்லனாகவும், வாரிசு படத்தில் கவுரவ தோற்றத்திலும் எஸ்.ஜே.சூர்யா நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக எஸ்.ஜே.சூர்யா தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறார். அவரது வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. சிம்புவின் மாநாடு படத்திலும் வித்தியாசமான வில்லத்தனம் காட்டி இருந்தார். எனவேதான் அவருக்கு வில்லன் வாய்ப்புகள் குவிகின்றன. விஜய்யின் 68-வது படத்திலும் வில்லனாக நடிக்க அழைப்பு வந்துள்ளது. ஏற்கனவே விஜய்யின் குஷி வெற்றி படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கி இருந்தார்.