சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி.. தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி
|தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இதற்காக நடிகர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதையடுத்து நேற்று சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்" எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.