ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது..!
|சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக சாய்பல்லவி நடிக்கிறார். இதில் சிவகார்த்திகேயன் ராணுவ மேஜராக நடிப்பதாக கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' திரைப்படம் 2024-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 23-வது திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் நேற்று (திங்கள் கிழமை) தன்னுடைய 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்த, நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள பதிவில், "எனது 23-வது படத்தில் உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கதையை கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.