'பிரேமலு' படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு
|ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'பிரேமலு' படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
சென்னை,
கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' மற்றும் 'பிரேமலு' ஆகிய மலையாளத் திரைப்படங்கள் தமிழ் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலும், வசூலையும் வாரி குவித்தன.
இதில் 'பிரேமலு' திரைப்படத்தை கிரிஷ் இயக்கியிருந்தார். விஷ்ணு விஜய் இசையில் வெளியான இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து சமீபத்தில் தமிழிலும் 'பிரேமலு' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் 'பிரேமலு' திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்ட சிவகார்த்திகேயன், "அழகான பொழுதுபோக்கு நிறைந்த படத்தை கொடுத்ததற்காக 'பிரேமலு' படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்து உள்ளார்.