'ரீமேக்' படத்தில் நடித்த அனுபவம் பகிர்ந்த சிவா
|முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்து 1972-ல் வெளியான 'காசேதான் கடவுளடா' படம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் சிவா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, "இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள்.
காசேதான் கடவுளடா மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் படம் மகிழ்விக்கும்.
காசேதான் கடவுளடா ரீமேக்கை இயக்குனர் கண்ணன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பழைய படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார்? என்று யோசித்தேன். ஆனால், மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்" என்றார்.