ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போலதான் - இயக்குனர் அமீர்
|சீதை அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன் என்று இயக்குனர் அமீர் கூறினார்.
ஜாபர், அமீரின் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தைத் தயாரிப்பதால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. 'தவறான வழியில் வந்தப் பணத்தில் இப்படம் உருவாகுமெனில் இப்படத்தில் நான் இருக்க மாட்டேன்' என்று அமீரும் இப்படத்திலிருந்து விலகினார். இதையடுத்து அமீரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விஷயங்கள் அமீர் குறித்து பேசப்பட, தானே முன் வந்து இந்த விவகாரம் குறித்து விரிவான விளக்கம் அளித்திருந்தார்.
இப்படி இந்தப் பிரச்னை ஓடிக்கொண்டிருக்க தற்போது அமீர் நடித்துள்ள 'உயிர் தமிழுக்கு' என்ற திரைப்படம் வரும் மே 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அரசியல் நையாண்டிப் படமான இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் 'உயிர் தமிழுக்கு' படம் குறித்தும் தன்னைப் பற்றிப் பரப்பபடும் அவதூறுகள் தன் குடும்பத்தைப் பாதிப்பது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார் அமீர்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் அமீர், "ஜாபர் சாதிக்கைத் தெரியும், அவருடன் பழகியிருக்கிறேன். ஆனால், அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவர் தொழில்கள் என்னென்ன, அவருக்கு எப்படி பணம் வருகிறது என்றெல்லாம் நான் ஒரு நாளும் கேட்டதில்லை. நம்முடன் நிறையபேர் பழகுவார்கள் அவரின் பின்னணியெல்லாம் ஆய்வு செய்து கொண்டிருக்க முடியாது. 'லைகா' நிறுவனம் மீது பல வழக்குகள் இருக்கிறது. 'லைகா' தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கிறார். என்றாவது ரஜினியிடம், லைகா நிறுவனத்தின் வழக்குகள் குறித்து யாரும் கேட்டிருக்கிறீர்களா. ஆனால், ஜாபர் சாதிக் 'இறைவன் மிகப் பெரியவன்' படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அப்படத்தில் நடித்த என்னைப் பற்றி அவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள்.
என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும், நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன்.
நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று விளக்கமளித்தப் பின்பும் என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுகிறது. என் கருத்தியலோடு மோத முடியாதவர்கள், என் மீது அவதூறுகள் பரப்பி என்னை வீழ்த்த நினைக்கிறார்கள். இந்த அவதூறுகள் எல்லாம் என்னை பாதிப்பதில்லை.ஆனால், இவையெல்லாம் என் குடும்பத்தையும், என் குழந்தைகளையும் பாதிக்கிறது. அவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. அமாலக்கத்துறை என்னை விசாரித்தது, நானும் முழு ஆதரவுக் கொடுத்து அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்தேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் எனக்கு எந்தப் பயமுமில்லை. என் மீது சந்தேகப்படுவது, கேள்வி கேட்பதையெல்லாம் நான் தாங்கிக் கொள்வேன், ஆனால் அவதூறு பரப்புவது சரியானதல்ல. சிலர் அதைத் திட்டமிட்டுச் செய்கின்றனர்" என்று வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.