< Back
சினிமா செய்திகள்
சிங்கப்பூர் சலூன் விமர்சனம்: விரும்பிய தொழிலில் சாதித்தாரா ஆர்.ஜே.பாலாஜி..?
சினிமா செய்திகள்

'சிங்கப்பூர் சலூன்' விமர்சனம்: விரும்பிய தொழிலில் சாதித்தாரா ஆர்.ஜே.பாலாஜி..?

தினத்தந்தி
|
28 Jan 2024 3:12 AM GMT

கத்தரிக்கோலில் கதக்களி ஆடும் ஸ்டைலான முடிவெட்டும் கலைஞராக ஆர்.ஜே.பாலாஜி கலக்கி உள்ளார்.

மத நல்லிணக்கம் போற்றும் கிராமத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜியும், கிஷன் தாசும் சிறுவயதில் இருந்தே நண்பர்கள்.

அதே ஊரில் சிங்கப்பூர் சலூன் கடை நடத்தும் லாலின் கத்தரிக்கோல் சுற்றும் அழகில் ஈர்ப்பாகும் ஆர்.ஜே.பாலாஜி, சிகை அலங்கார தொழிலில் ஈடுபட விரும்புகிறார்.

ஆனால் குடும்பத்தினர் நிர்பந்தம் காரணமாக என்ஜினீயரிங் படித்து முடித்த கையோடு சலூன் துறைக்குள் நுழைந்து, சொந்தமாக சிங்கப்பூர் சலூன் என்ற கடையை திறக்கிறார்.

அந்த துறையில் அவரை வளர விடாமல் பல தடைகள் வருவதும், அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்றாரா? என்பதும் மீதி கதை.

கத்தரிக்கோலில் கதக்களி ஆடும் ஸ்டைலான முடிவெட்டும் கலைஞராக ஆர்.ஜே.பாலாஜி கலக்கி உள்ளார். நீண்ட முடி, அமைதியான முகம் என நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனாகவே மாறி இருக்கிறார்.

காதல், மனைவியிடம் அன்பு, மாமனாரிடம் பரிவு, உறவுகளை அனுசரித்துப்போகும் நிதானம் என பல்வேறு பரிமாணங்களை மிக சிறப்பாக வெளிப்படுத்தி தேர்ந்த நடிகராக மின்னுகிறார். அவரது டைமிங் காமெடிகள் சிரிப்பு ரகம்

மீனாட்சி சவுத்ரி தன் அழகாலும், ஆற்றலாலும் இருப்பை தக்க வைத்துக்கொள்கிறார். ஓரிரு காட்சிகளே வந்தாலும் ஷீத்தல் மனதில் நிற்கிறார்.

லேசான தலை முடி, நெற்றியில் விபூதி என பக்தி மணம் கமழும் மாமனாராக வரும் சத்யராஜின் நடிப்பும், தோற்றமும் சிறப்பு.

சின்னி ஜெயந்த், கிஷன் தாஸ், லால், ஜான் விஜய், ஒய்.ஜி.மகேந்திரன், தலைவாசல் விஜய் உள்ளிட்ட அனைவரும் சிறிது நேரமே வந்தாலும் தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வழங்கி உள்ளனர்.

விவேக்-மெர்வின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சுகுமாரின் ஒளிப்பதிவு அற்புதம்.

பிளாஷ்பேக் காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம்.

சிங்கப்பூர் சலூனை நோக்கி கிளிகள் வருவது, குப்பத்து இளைஞர்களின் நட்பு, சலூனில் பிரசவித்த குழந்தையின் தொப்புள் கொடியை புதிய கத்திரிகோலால் வெட்டுவது போன்ற உயிர்ப்பான காட்சிகள் பலம்.

அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தொழில் செய்தால் சாதிக்க முடியும் என்ற எளிய கதையை காதல், காமெடியுடன் போரடிக்காமல் ஜனரஞ்சகமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் கோகுல்.

மேலும் செய்திகள்