சிம்பு 'தக் லைப்' படத்தில் நடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை - ஐசரி கணேஷ்
|சிம்பு 'தக் லைப்’ படத்தில் நடிக்கவேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் எங்களுடைய படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று தான் சொல்கிறோம் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்த ஐசரி கணேஷ், அப்படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்புவை வைத்து கொரோனா குமார் படத்தை தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருந்தார். ஆனால், படம் அறிவித்து பல ஆண்டுகள் கடந்தும், அது தொடர்பான அப்டேட் எதுவும் இல்லை. இதனால் படம் கைவிடப்பட்டது என்றும் சிம்பு படத்திலிருந்து விலகினார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்திற்காக சிம்புவுக்கு 4.5 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், சிம்பு படத்தில் நடிக்காமல் ஏமாற்றிவிட்டதாக ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து விசாரித்த நீதிமன்றம், சிம்பு திரைப்படங்களில் நடிக்க இடைக்கால தடை விதித்திருந்தது.
இதனிடையேதான் தற்போது சிம்பு மணிரத்னம் இயக்கும் தக் லைப் படத்தில் இணைந்துள்ளார். இதையறிந்த ஐசரி கணேஷ், சிம்பு தக் லைப் படத்தில் நடிக்க கூடாது என்றும், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இதனால், 'தக் லைப்' படத்தில் அவர் நடிக்கக் கூடாது என ஐசரி கணேஷ் பிரச்சினை செய்வதாக சொல்லப்பட்டது. இந்தக் கேள்விக்கு நேற்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார் ஐசரி கணேஷ்.
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், ஐசரி கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் 'பி.டி சார்' திரைப்படம் வருகிற மே 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் சிம்பு பிரச்சினைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஐசரி கணேஷ், " 'தக் லைப்' படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு தான் இருக்கிறது. நாங்கள் சிம்புவை நடிக்கக் கூடாது என்று சொல்லவில்லை. எங்களுக்கு ஒரு படம் நடித்துக் கொடுத்து விட்டு சென்றால் நன்றாக இருக்கும் என்றுதான் கோரிக்கை வைத்தோம். அவரும் விரைவில் படம் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அண்ணன் - தம்பிக்குள் நடக்கும் பிரச்சினை தான் இது. சீக்கிரம் சுமுகமாக முடிந்து விடும்" என்றார்.
"ரஜினிகாந்த் உங்கள் தயாரிப்பில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தது உண்மையா?" என்று கேட்கப்பட்ட போது, "நான் ரஜினிகாந்தை சந்தித்தது உண்மைதான். அவரும் எங்கள் தயாரிப்பில் படம் நடித்துத் தருவதாக சொல்லி இருக்கிறார். சீக்கிரம் நல்ல செய்தி வரும்" என்றார்.
நடிகர்கள் மீதான குற்றச்சாட்டை வெளிப்படையாக தெரிவிக்காததற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கு, அனைவரையும் அப்படி சொல்லிவிட முடியாது அநேக நடிகர்கள் சரியான முறையில் நடித்துக் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஹிப்ஹாப் ஆதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் முழு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அவர்களோடு மீண்டும் மீண்டும் படங்களை செய்து வருகிறோம், ஒரு சில நடிகர்கள் செய்வது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தாது என்றார்.