போஸ்டர் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இந்தியன் 2 படக்குழு
|இந்தியன் 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு நடிகர் சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது. இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதன்படி, இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என புதிய போஸ்டரை வெளியிட்டு படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. நடிகர் சித்தார்த் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன்படி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்தியன் 2 படக்குழு போஸ்டர் வெளியிட்டு உள்ளது. அதனுடன் பகிர்ந்த பதிவில்,
இந்தியன் 2 படக்குழு சார்பாக நடிகர் சித்தார்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். காலத்தால் அழியாத உங்களின் மாறுபட்ட பாத்திரங்களும், வசீகரமும் தொடர்ந்து அனைவரையும் கவருகின்றன. திரைத்துறையில் உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துகள். இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியன் 2 படத்தில் நடிகர் சித்தார்த் போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.