திருமணம் குறித்து மனம் திறந்த நடிகர் சித்தார்த்
|திருமணம் குறித்த முடிவை குடும்ப பெரியவர்கள் எடுப்பார்கள் என்று சித்தார்த் கூறினார்.
சென்னை,
நடிகர் சித்தார்த் தமிழ், தெலுங்கு, இந்தி என்று மூன்று மொழிகளில் நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இவர் நடிப்பது மட்டுமல்லாமல் இடாகி என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களையும் தயாரித்து வருகிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சித்தா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருதையும் சித்தார்த் பெற்றார்.
நடிகர் சித்தார்த்தும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் வதந்திகள் பரவின. இதையடுத்து இருவரும் தங்களது சமூக வலைதள பக்கத்தில் "அவர் யெஸ் சொன்னார். நிச்சயதார்த்தம் முடிந்தது" என்று பதிவிட்டு நிச்சயதார்த்தம் முடிந்ததாக தெரிவித்தனர். இந்த பதிவையடுத்து திருமணம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டுவந்தனர்.
இந்நிலையில், திருமணம் குறித்து நடிகர் சித்தார்த் மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலானோர் நாங்கள் இதை ரகசியமாக வைத்திருக்கிறோம் என்று கூறுகின்றனர். ரகசியமாக எதையாவது செய்வதற்கும் குடும்பத்துடன் செய்வதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
இந்த முடிவை குடும்ப பெரியவர்கள் எடுப்பார்கள். இது சூட்டிங் இல்லை, நான் அந்த தேதியை தேர்வு செய்ய. இது வாழ்நாளில் எடுக்கும் முக்கியமான தேதி, எப்போது அவர்கள் திருமணம் செய்ய சொல்கிறார்களோ அப்போது அது நடக்கும். என்றார்