ஹாலிவுட்டில் நடித்த சுருதிஹாசன் மகிழ்ச்சி
|சுருதிஹாசன் நடித்த ‘தி ஐ' என்ற ஹாலிவுட் படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
தனுஷ் நடித்த 'தி கிரேமேன்' ஹாலிவுட் படம் சமீபத்தில் வெளியானது. சமந்தாவும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் சுருதிஹாசன் 'தி ஐ' என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் திரைக்கு வர தயாராகிறது.
இந்த நிலையில் 'தி ஐ' படம் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. லண்டன் திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டு உள்ளது. இதனால் சுருதிஹாசன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இதுகுறித்து சுருதிஹாசன் கூறும்போது, "நான் நடித்துள்ள தி ஐ படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். சுற்றுச்சூழல் மாசுவை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
தி ஐ படத்தை ரசிகர்களுக்கு காட்டுவதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்'' என்றார். இதில் தி லாஸ்ட் கிங்டம் புகழ் மார்க் ரவுலி நாயகனாக நடித்து இருக்கிறார். பிரபாஸ் ஜோடியாக சுருதிஹாசன் நடித்த சலார் படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.