பின்தொடர்ந்த மர்ம நபர்... சுருதிஹாசன் பகிர்ந்த கசப்பான அனுபவம்
|நடிகை சுருதிஹாசனை சில தினங்களுக்கு முன்பு மும்பை விமான நிலையத்தில் மர்ம நபர் பின்தொடர்ந்ததும், அவரை பார்த்து சுருதிஹாசன் கடுப்பாகி சத்தம் போட்டதும் பரபரப்பானது. தற்போது ரசிகர் ஒருவர் வலைத்தளத்தில் சுருதிஹாசனிடம் மும்பை விமான நிலையத்தில் சந்தித்த கசப்பான அனுபவம் பற்றி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து சுருதிஹாசன் கூறும்போது, "என்னை பின்தொடர்ந்து வந்த நபர் யார் என்று தெரியாது. விமான நிலையத்தில் நடந்து சென்றபோது அவர் என் பின்னால் வருவதை கவனித்தேன்.
எனக்கு மிகவும் நெருக்கமாக அவர் வந்ததால் அசவுகரியமாக இருந்தது. இதனால் வேகமாக நடந்து வெளியே வந்தேன். காரில் ஏறுவது வரை தொடர்ந்து வந்தார். நான் பயந்து போனேன்.
நீங்கள் யார் என்று சத்தமாக கேட்டேன். உடனே நழுவி சென்று விட்டார். எனக்கு சொந்தமாக பவுன்சர்கள் வைத்துக்கொள்ளவில்லை. சுதந்திரமாக வாழ ஆசைப்படுகிறேன். அதனால்தான் இப்போது வரை பாதுகாப்புக்கு பாடிகார்டுகள் இல்லாமல் இருக்கிறேன். இந்த சம்பவத்துக்கு பிறகு பாடிகார்டு வைத்துக்கொள்ள வேண்டுமோ? என யோசிக்கிறேன்'' என்றார்.