விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமதம்... கோபத்தில் சுருதி ஹாசன் வெளியிட்ட பதிவு
|விமான நிலையத்தில் ஏற்பட்ட தாமதம் குறித்து நடிகை சுருதி ஹாசன் 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மும்பை,
மோசமான வானிலை, தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட காரணங்களால் விமான சேவை பாதிக்கப்படும்போது, விமான நிறுவனங்களின் தரப்பில் முன்கூட்டியே பயணிகளுக்கு தாமதம் குறித்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால் சில நேரங்களில் உரிய அறிவிப்புகளை வெளியிடாததால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகும் சம்பவங்கள் அரங்கேறும். அந்த வகையில், மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாகவும், ஆனால் அது குறித்து எந்த முறையான தகவலும் அளிக்கப்படவில்லை எனவும் நடிகை சுருதி ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுருதி ஹாசன், நள்ளிரவு 12.24 மணிக்கு தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் சாதாரணமாக குறை சொல்லும் நபர் கிடையாது. ஆனால் இண்டிகோ நிறுவனத்தினர் இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டனர். கடந்த 4 மணி நேரமாக எந்தவித தகவலும் கிடைக்காமல் விமான நிலையத்தில் நாங்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா?" என்று குறிப்பிட்டிருந்தார்.
சுருதி ஹாசனின் இந்த பதிவிற்கு இண்டிகோ விமான நிறுவனம் அளித்துள்ள பதிலில், "தாமதத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம். நீண்ட நேரம் காத்திருப்பது எத்தனை சிரமமானது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமானங்களின் வருகை தாமதமாகியுள்ளது. இதுபோன்ற காரணங்கள் எல்லாம் எங்களுடைய கட்டுப்பாட்டை மீறியது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.