ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறேனா? சுருதிஹாசன் விளக்கம்
|ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அது பொய்யான தகவல் என்று சுருதிஹாசன் கூறி உள்ளார்.
நடிகை சுருதிஹாசன் சில தினங்களுக்கு முன்பு தனக்கு வளர்ச்சிதை மாற்றம் மற்றும் பி.சி.ஓ.எஸ். என்ற மருத்துவ ரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்றும், இதில் இருந்து மீள கடுமையான உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
உடல் சரியில்லாமல் இருந்தாலும், மனம் மகிழ்ச்சியாக உள்ளது. மகிழ்ச்சியாக இருங்கள். ஹார்மோன்களை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தார். இதைவைத்து சுருதிஹாசன் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் இணையதளங்களில் தகவல் பரவின.
இதற்கு சுருதிஹாசன் விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோவில், ''நான் தற்போது ஐதராபாத்தில் படப்பிடிப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பல பெண்களைப்போல் நான் பி.சி.ஓ.எஸ்.சால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று தெரிவித்த கருத்தை சரியாக புரிந்து கொள்ளாமல் எனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. அது பொய்யான தகவல். ஒரு வருடமாக பி.சி.ஓ.எஸ். பிரச்சினை உள்ளது. ஆனாலும் நலமாகவே இருக்கிறேன்" என்று கூறி உள்ளார்.