மீண்டும் இந்தியில் சுருதிஹாசன்
|மீண்டும் இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருவதாக சுருதிஹாசன் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சுருதிஹாசன், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். நடிகையாகும் முன்பு இசை துறையில் திறமையை வெளிப்படுத்தி வந்தார். ஆல்பங்களில் பாடவும் செய்தார்.
இசை மற்றும் நடிப்பு அனுபவங்கள் குறித்து சுருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில், ''நான் நடிக்க வந்த புதிதில் பாட தெரியும் என்று சொன்னதும் எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அப்போது பல திறமை உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இப்போது நிலைமை மாறி இருக்கிறது. பன்முக திறமை உள்ளவர்கள் அதிகமாகி விட்டார்கள்.
தற்போது பிரபாஸுவுடன் சலார் படத்தில் நடிக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நல்ல கதாபாத்திரத்தை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் இந்த பட வாய்ப்பு வந்தது. மீண்டும் இந்தி படங்களில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறேன்.
எனது தந்தை கமல்ஹாசனிடம் நிறைய கற்றுக்கொண்டேன். இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இசை என்றால் உயிர். அவர்கள் இசையமைப்பாளர்கள் மட்டுமின்றி மனிதாபிமானம் நிறைந்த மிகச்சிறந்த மனிதர்கள்" என்றார்.