நிகழ்ச்சி ரத்து: முன்தொகையாக பெற்ற ரூ.29 லட்சத்தை திருப்பி தரவில்லை - ஏ.ஆர்.ரகுமான் மீது பரபரப்பு புகார்
|இசை நிகழ்ச்சிக்காக பெற்ற முன்தொகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
இசை நிகழ்ச்சிக்காக பெற்ற முன்தொகையை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திருப்பி தரவில்லை என்று இந்திய அறுவை சிகிச்சை மருத்துவ சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாருக்கு ஏ.ஆர்.ரகுமான் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மாநாட்டில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொள்வதாக கூறியதாகவும் ஆனால் கடைசி நேரத்தில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 29 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும் அதனை ஏ.ஆர்.ரகுமான் சார்பில் காசோலை மூலம் திருப்பி அளித்த போது, அது வங்கியில் செல்லுபடி ஆகவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் பிறகு பலமுறை தொடர்பு கொண்டும் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்துள்ள ஏ.ஆர்.ரகுமானின் செயலாளர் செந்தில் வேலவன், மூன்று கோடி ரூபாய்க்கு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டதாகவும் ஆனால் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் முன்பணத்தை திருப்பி அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காசோலை திரும்பியது உண்மைதான், அதற்கு மாற்றாக பணத்தை நேரடியாக திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.