விமானத்தில் ரசிகை செய்த விபரீத செயல்...ஷாக் ஆன மைக் மோகன்
|1980-ம் ஆண்டு வெளியான மூடுபனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன்.
சென்னை,
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். தொடர்ச்சியாக வெள்ளி விழா படங்கள் கொடுத்தவர் என்ற பெருமையும் உண்டு. இவரை மைக் மோகன் என்று ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர். 1980-ம் ஆண்டு வெளியான மூடுபனி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மோகன். இந்த படத்தை பாலு மகேந்திரா இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெஞ்சை கிள்ளாதே, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, காற்றுக்கென்ன வேலி, விதி, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த மோகன் இப்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். கோட் படத்திலும் விஜய்க்கு வில்லனாக மோகன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் மோகன் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த வகையில் அவர் ஒரு பேட்டியில் கூறுகையில்,
நான் மலேசியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்துக் கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், "நான் உங்கள் தீவிர ரசிகை" என அறிமுகப்படுத்திக் கொண்டார். அந்த பெண்ணுடன் அவருடைய மகனும் இருந்ததாக கூறப்படுகிறது.
மோகனுடன் அந்த பெண் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மகன், "அம்மா அதை எடுத்து வெளியே காட்டுங்கள்" என்றார். உடனே அந்த பெண் தன் கழுத்தில் இருந்த தாலியை எடுத்து காட்டினார். அதில் ஒரு லாக்கெட் இருந்தது. அதை திறந்து காட்டிய போது அதில் எனது புகைப்படம் இருந்தது. இதை பார்த்த எனக்கு ஷாக் ஆகிவிட்டது.
அப்போது அந்த பெண் ரசிகை மேலும் கூறுகையில்,
"சார் எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். அதனால்தான் உங்களுடைய லாக்கெட்டை வைத்திருந்தேன். திருமணமான புதிதில் "நான் உங்கள் ரசிகை" என என் கணவரிடம் கூறினேன். அவரும் "சரி அந்த லாக்கெட்டை கழுத்திலேயே போட்டுக் கொள்" என்று கூறிவிட்டார். இதை நான் சாகும் வரை போட்டுக் கொண்டிருப்பேன்" என அந்த பெண் கூறியதும் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. மேலும் எந்த கணவர்தான் இன்னொருத்தர் புகைப்படத்தை தாலியில் வைத்துக் கொள்ள சம்மதிப்பார். இப்படிப்பட்ட ரசிகர்களால்தான் நான் சினிமாவில் நிலைத்திருந்தேன் என மோகன் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.