சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு.. டோவினோ தாமஸின் 'நடிகர் திலகம்' பட பெயர் மாற்றம்
|மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் ‘நடிகர் திலகம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.
சென்னை,
பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ். இவர் தனுசுடன் மாரி 2 படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் இவர் நடிப்பில் வெளியான மின்னல் முரளி, மாயநதி, லூக்கா, வைரஸ், 2018 போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவரை முன்னணி நடிகராக உயர்த்தியது.
அதிலும் 2018 படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளத்தில் இவர் நடிப்பில் 'நடிகர் திலகம்' என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. பிரபல வில்லன் நடிகர் லால் மகன் ஜீன் பால் லால் இயக்குகிறார்.
இந்தப்படம் அரசியலுக்கு வர விரும்பும் நடிகரை மையமாக வைத்து நகைச்சுவை கதையம்சத்தில் தயாராவதாக கூறப்படுகிறது. படத்துக்கு நடிகர் திலகம் பெயர் வைப்பது சிவாஜி கணேசனை அவமதிப்பதாக உள்ளது என்றும் பெயரை மாற்றவேண்டும் என்றும் வற்புறுத்தி சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சந்திரசேகரன் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் மனு அளித்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் பெயர் 'நடிகர்' என மாற்றப்பட்டு உள்ளது. இந்த படத்தின் புதிய டைட்டிலை நடிகர் பிரபு கொச்சியில் நடைபெற்ற டைட்டில் அறிவிப்பு விழாவில் கலந்து கொண்டு வெளியிட்டார். அப்போது படத்தின் பெயரை மாற்றியதற்காக படக்குழுவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.