ராம் சரண் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகும் சிவராஜ்குமார்
|ராம் சரணின் 16-வது படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார்
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்தில் நடித்து இருக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பை ராம் சரண் நிறைவு செய்தார். இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தை தொடர்ந்து ராம் சரண் தனது 16-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ளது. ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் புச்சி பாபு இயக்குகிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார் இணைந்துள்ளார். இதனை அவரின் பிறந்தநாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் சிவராஜ்குமார் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.