கதாநாயகனுடன் உல்லாசமாக இருக்க சொன்னார்... மறைந்த தயாரிப்பாளர் மீது குற்றம்சாட்டிய ஹாலிவுட் நடிகை
|படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க முடியும் என தயாரிப்பாளர் வற்புறுத்தியதாக ஷாரோன் ஸ்டோன் தெரிவித்தார்.
நடிகைகள் தங்களின் கடந்தகால வாழ்க்கை, தொழில் சார்ந்து தாங்கள் எதிர்கொண்ட கசப்பான அனுபவங்கள், அட்ஜஸ்ட்மென்ட் சிக்கல்கள் மற்றும் திரைமறைவு ரகசியங்கள் குறித்து பேசுவது இப்போது பேஷனாகிவிட்டது. அந்த வரிசையில் பிரபல ஹாலிவுட் நடிகை ஷாரோன் ஸ்டோன் இணைந்துள்ளார்.
ஷாரோன் ஸ்டோன் 1990களில் ஹாலிவுட்டில் கவனம் பெற்ற நடிகையாக வலம் வந்தவர். சிசர்ஸ், பேசிக் இன்ஸ்டிங்க்ஸ், டோட்டல் ரீகால், சில்வர், தி ஸ்பெஷலிஸ்ட், கேசினோ, ஆல்பா டாக், ரன்னிங் வைல்டு உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் அதிக ரசிகர்களை கொண்டுள்ள ஷாரோன் ஸ்டோன் நடிப்பில் சமீபத்தில் வாட் அபவுட் லவ் என்ற படம் வெளியானது.
இந்நிலையில், தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துள்ள ஷாரோன் ஸ்டோன், மறைந்த இயக்குனர் ராபர்ட் இவான்சுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சமீபத்திய பாட்காஸ்ட் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-
1993-ம் ஆண்டில் சில்வர் படத்தில் நடித்தபோது, படத்தின் தயாரிப்பாளர் மறைந்த ராபர்ட் இவான்ஸ் என்னை தனியாக சந்தித்து பேசினார். அப்போது, படத்தின் கதாநாயகன் பில்லி பால்ட்வினுடன் காதல் காட்சியில் சிறப்பாக நடிக்க வேண்டும் என்றால் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சரியாக இருக்க வேண்டும், அதனால் படப்பிடிப்புக்கு செல்லும் முன்பு அவருடன் ஒருநாள் தூங்கி, உல்லாசமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.
பில்லி பால்ட்வின்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் காட்சிகளில் தத்ரூபமாக நடிக்க முடியும், பில்லியின் நடிப்பும் சிறப்பாக இருக்கும் என்று கூறி என்னை வற்புறுத்தினார்.
தானும் இதற்கு முன்னர் ஒரு முன்னணி நடிகையுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டதாகவும், அதன்பிறகு அவர் சிறப்பாக நடித்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவரது கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. நான் மறுத்துவிட்டேன்.
இவ்வாறு ஷாரோன் ஸ்டோன் கூறியுள்ளார்.
ஷாரோனின் இந்த குற்றச்சாட்டுக்கு நடிகர் பில்லி பால்ட்வின் பதிலடி கொடுத்துள்ளார். "ஷாரோன் ஸ்டோன் இத்தனை வருடங்கள் கழித்து ஏன் என்னைப் பற்றி பேசுகிறார் என்று தெரியவில்லையா? அவர் இன்னும் என் மீது ஆசை கொண்டிருக்கிறாரா? அல்லது நான் அவருடைய ஆசையை தவிர்த்துவிட்டதால் இன்னும் வருத்தப்படுகிறாரா? அவரைப் பற்றிய ரகசியங்களை வெளியிடவா? " என பில்லி பால்ட்வின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.