கிராமத்து அதிரடி கதையில் சாந்தனு
|சாந்தனு கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் `இராவண கோட்டம்'. இதில் நாயகியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். பிரபு, இளவரசு, தீபா சங்கர், சஞ்சய், முருகன், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை விக்ரம் சுகுமாரன் டைரக்டு செய்துள்ளார். இவர் `மதயானை கூட்டம்' படத்தை டைரக்டு செய்தவர். இசை: ஜஸ்டின் பிரபாகர், ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன். கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
படம் பற்றி சாந்தனு கூறும்போது, ``ராமநாத புரம் பகுதியில்1957-ல் நடந்த தூவல் கலவரம், கருவேல மரங்கள் பின்னால் நடந்த அரசியல் போன்ற உண்மை சம்பவங்கள்தான் படத்தின் மையக்கரு. அதற்குள் காதல், சண்டைகளும் இருக்கும். நான் செங்குட்டுவன் என்ற கிராமத்து இளைஞனாக வருகிறேன்.
நகரப் பகுதியில் வளர்ந்த நான், கடும் பயிற்சி எடுத்து கிராமத்து இளைஞனாக உருமாறி இருக்கிறேன். ராமநாதபுரம் மக்களின் வாழ்வியல் எனக்கு புதிதாக இருந்தது. படப்பிடிப்பு இல்லாதபோதும் லுங்கி கட்டி சாதாரண இளைஞனாகவே நடமாடினேன். அங்குள்ள மொழியில் பேசினேன். செருப்பு போடாமலேயே நடந்தேன்.
படத்தில் என்னை பார்த்தவர்கள் `சாந்தனு மாதிரி இல்லை' என்றனர். அந்த அளவுக்கு என்னை இயக்குனர் உருமாற்றி இருக்கிறார். முந்தைய படங்கள் போல் இல்லாமல் எளிய மக்களையும்போய் சேரும் வகையில் எனது கதாபாத்திரத்தை மாற்றி இருக்கிறேன். முழு கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது'' என்றார்.
படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.