படமாகும் டி.வி. தொடர்: சக்திமான் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங்
|சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹீரோ இந்தி தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிய அளவில் தன்வசப்படுத்தியது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். கொரோனா ஊரடங்கில் சக்திமான் தொடரை மறு ஒளிபரப்பு செய்தனர். இந்த நிலையில் சக்திமான் தொடரை சினிமா படமாக எடுக்க இருப்பதாக முகேஷ் கன்னா சமீபத்தில் அறிவித்தார்.
"சக்திமான்தான் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ. ஒரு தலைமுறையே சக்திமானை பார்த்து வளர்ந்து இருக்கிறது. சக்திமான் தொடரை பிரமாண்ட சினிமா படமாக தயாரிக்க இருக்கிறோம். சக்திமான் இந்த காலத்துக்கும் பொருத்தமான கதை" என்று அவர் கூறினார். இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்கிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சக்திமான் படத்தை ஓம் ராவத் இயக்க உள்ளார்.