ஷாருக்கான் பிறந்தநாள் : புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த அட்லீ..!
|பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
சென்னை,
1992ம் ஆண்டு வெளியான 'தீவானா' என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகர் ஷாருக்கான், தொடர்ந்து பல்வேறு வெற்றி படங்களின் மூலம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக விளங்குகிறார். அவர் நடித்த பல்வேறு திரைப்படங்கள் இந்தி மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதன் மூலம் இந்திய அளவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளார்.
2018-ம் ஆண்டு 'ஜீரோ' படத்தின் மூலம் மிகப்பெரிய தோல்வியைக் சந்தித்த ஷாருக்கான், அதன் பின்னர் ஒரு சில காரணங்களால் கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்து வந்தார். இடையில் ஓரிரு படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் தலையைக் காட்டி வந்தார். இந்த நிலையில்தான் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷாருக்கான் நடிப்பில் 'பதான்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 25-ந் தேதி வெளியானது. நாட்டுப்பற்றை மையமாக வைத்து உருவாகியிருந்த இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அதன் பிறகு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'ஜவான்'. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 'ஜவான்' திரைப்படம் உலக அளவில் ரூ.1,004.92 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
நடிகர் ஷாருக்கான் இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரைபிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ தனது வாழ்த்துக்களை நடிகர் ஷாருக்கானுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஜவான் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், 'என் அன்பான ஷாருக்கான் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.