'செல்பி' எடுத்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்த ஷாருக்கான்
|இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார்களில் ஷாருக்கானும் ஒருவர். தனது நடிப்பில் வெளியான பதான் படத்தின் வெற்றியால் உற்சாகமாக இருக்கிறார். தற்போது அட்லி இயக்கத்தில் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளது.
ஷாருக்கானை காண மும்பையில் உள்ள அவரது வீட்டின் முன் தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வதும், வீட்டின் மாடியில் நின்று ரசிகர்களை பார்த்து ஷாருக்கான் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் வழக்கமாக நடக்கிறது.
இப்படிப்பட்ட ஷாருக்கான், ரசிகர் ஒருவரிடம் கோபமாக நடந்து கொண்டது பரபரப்பாகி உள்ளது. மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கான் வந்து கொண்டிருந்தபோது ஒரு ரசிகர் ஷாருக்கான் அருகில் சென்று செல்பி எடுக்க முயன்றார்.
இதனால் எரிச்சலான ஷாருக்கான் அந்த செல்போனை ரசிகர் கையில் இருந்து தட்டி விட்டார். அது பறந்துபோய் கீழே விழுந்தது. அந்த ரசிகரை திரும்பி பார்த்து முறைத்தபடி ஷாருக்கான் அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களிடம் அன்பாக நடந்து கொள்ளும் ஷாருக்கானா இப்படி செய்தார்? என்று பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.