மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் : சம்பளம் வாங்காமல் நடித்த நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான்
|மும்பை வந்ததற்கான விமான கட்டணத்தை கூட நடிகர் சூர்யா வாங்கவில்லை என மாதவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கிறார் நடிகர் ஆர்.மாதவன். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. நாயகனாக மாதவன் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகர் சூர்யா நடித்துள்ளனர். இந்த படத்தின் விளம்பர பணிகளில் நடிகர் மாதவன் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாதவன், ஷாருகான் மற்றும் சூர்யா இந்த படத்தில் நடித்ததற்காக சம்பளம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், " சூர்யா, ஷாருக்கான் இருவரும் படத்திற்கு எந்த சம்பளமும் வாங்கவில்லை. கேரவன்கள், உடைகள் மற்றும் உதவியாளர்களுக்காக கூட அவர்கள் சம்பளம் வாங்கவில்லை. மும்பையில் படப்பிடிப்பிற்காக தனது சொந்த செலவில் சூர்யா தனது படக்குழுவினருடன் மும்பை வந்தார். அதற்காக விமான கட்டணத்தை கூட அவர் வாங்கவில்லை.
திரையுலகில் நிறைய நல்லவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நான் வெளியில் இருந்து வந்தவன். மக்கள் எனக்கு நிறைய உதவியிருக்கிறார்கள். என்னுடைய வேண்டுகோளின் பேரில் அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா ஆகியோர் படத்தை ஆதரித்து டுவீட் செய்தனர். அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி " என அவர் தெரிவித்தார்.