அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
|அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள 'ஜவான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான 'பதான்' திரைப்படம் உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலில் சாதனையும் படைத்தது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பாலிவுட் பாட்ஷா, சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கான் தற்போது 'ஜவான்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதியும், நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.