< Back
சினிமா செய்திகள்
பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்
சினிமா செய்திகள்

பாலியல் புகார்: நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

தினத்தந்தி
|
20 Sept 2024 9:12 PM IST

பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட பிரபல நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஹைதராபாத்,

சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.

இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது .மேலும் தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் தெரிவித்து இருந்ததால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

புகாரில் அந்தப் பெண், "கடந்த 2019-ம் ஆண்டு ஜானி மாஸ்டர், எனக்கு உதவி நடன இயக்குநர் வேலை கொடுத்தார். படப்பிடிப்புக்காக சென்னை, மும்பைக்கு சென்றிருந்தோம். அப்போது 18 வயது நிரம்பாத நிலையில், திருமண ஆசை காட்டி பாலியல் துன்புறுத்தல் செய்தார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானி மாஸ்டர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஹைதரபாத் உப்பரப்பள்ளி நீதிமன்றத்தில் ஜானி ஆஜர் படுத்தப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சஞ்சல்குடா மத்திய சிறையில் அடைக்கப்படுவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகார் எழுந்த நிலையில் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்