பாலியல் புகார் - நடன இயக்குனர் ஜானி கைது
|ஜானி மாஸ்டரை பெங்களூரில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஆந்திரா,
சிறந்த நடன இயக்குநராக திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் அறிவிக்கப்பட்டார். இவர் தெலுங்கு திரைப்படத்தில் இடம்பெற்ற புட்ட பொம்மா பாடலின் மூலம் கவனம் பெற்றார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து, ரஜினியின் ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவாலா ஆகிய ஹிட் பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றியிருந்தார்.
இந்த நிலையில் ஆந்திர மாநில திரைப்பட நடன கலைஞராக இருக்கும் இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் என்று அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் மீது விசாரித்த காவல்துறை நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, தானாக முன்வந்து காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது .மேலும் தன்னுடைய 16 வயதில் ஜானி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த இளம்பெண் தெரிவித்து இருந்ததால் ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டத்தில் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில், ஜானி மாஸ்டரை பெங்களூரில் வைத்து ஐதராபாத் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும் ஜானி மாஸ்டரை காவல்துறையினர் ஐதராபாத் அழைத்து செல்ல உள்ளனர்.
பாலியல் புகார் எழுந்த நிலையில் நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் தெலுங்கானா நடன இயக்குநர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.