கடுமையான நெஞ்சு வலி... பழம்பெரும் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி
|தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான ‘யாகாவா ராயினும் நாகாக்க’ முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
கொல்கத்தா,
பழம்பெரும் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி (வயது 73) கடுமையான நெஞ்சு வலி காரணமாக இன்று கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 1966ம் ஆண்டு பெங்காலியில் வெளியான 'மிரிகயா'என்ற படத்தின் மூலம் மிதுன் சக்கரவர்த்தி சினிமா துறையில் அறிமுகமானார். அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்று நாட்டையே திரும்பி பார்க்க வைத்தார். இந்தி, பெங்காலி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமடைந்தார். இவர் தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான 'யாகாவா ராயினும் நாகாக்க' முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து இருந்தார்.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எம்.பி. யாகவும் மிதுன் சக்கரவர்த்தி இருந்து வந்துள்ளார். பின்னர், சாரதா நிதி நிறுவன மோசடியில் சிக்கினார். அதை தொடர்ந்து எம்.பி- பதவியை மிதுன் சக்கரவர்த்தி ராஜினாமா செய்தார். கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் கடுமையான நெஞ்சுவலி காரணமாக நடிகர் மிதுன் சக்கரவர்த்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் தற்போது நரம்பியல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
3 முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ள மிதுன் சக்கரவர்த்தி கடந்த மாதம் குடியரசு தலைவரிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.