தேசிய விருது பெற்ற "குற்றம் கடிதல்" படத்தின் இரண்டாம் பாகம்
|கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருது பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளரே இரண்டாம் பாகத்தின் ஹீரோவாக மாறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பிரம்மா இயக்கத்தில் உருவான 'குற்றம் கடிதல்' என்ற திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பதும் இந்த படத்திற்கு தமிழில் சிறந்த படத்திற்கான விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'குற்றம் கடிதல்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் நிலையில் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் சதீஷ்குமார் நாயகனாக மாறியுள்ளார்.
இந்த படம் குறித்து பேசிய ஜே.எஸ்.கே. சதீஷ் குமார், "கொடைக்கானல் அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 60 வயது ஆசிரியராக நடிக்கிறேன். ஓய்வு பெறும் சமயத்தில் குடியரசுத் தலைவர் கரங்களால் நல்லாசிரியர் விருது வாங்கும் நேரத்தில் அவரது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் சம்பவங்களை தொகுத்து இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.
இந்த படத்தை பார்த்திபன் நடித்த 'புதுமைப்பித்தன்', கார்த்திக் நடித்த 'லவ்லி' படங்களை இயக்கிய ஜீவா இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு டிகே இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான சதீஷ்குமார் கூறியபோது 'இந்த படத்தின் கதை தன்னை கவர்ந்ததாகவும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி வருவதாகவும், இன்றைய சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருத்தை சொல்லும் படம் என்பதால் நிச்சயம் இந்த படம் நல்ல வெற்றி பெறுவதோடு தேசிய விருதையும் வெல்லும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜேஎஸ்கே பிலிம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் 'ஆரோகணம்', 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' ,'பரதேசி', 'ரம்மி' ,'புரியாத புதிர்' உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள சதீஷ்குமார், 'தரமணி', 'பேரன்பு' ,'அநீதி' உள்பட சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தற்போது அவர் ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'குற்றம் கடிதல் 2' படத்தின் படப்பிடிப்பு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கி கொடைக்கானல், திண்டுக்கல், சென்னை மற்றும் கேரளாவில் நடைபெறுகிறது. இதர நடிகர்கள் மற்றும் படக்குழு பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.