தமிழ் சினிமாவுக்கு கிடைத்த சிறந்த நடிகர்கள் கவின் மற்றும் மணிகண்டன் - இயக்குநர் செல்வராகவன்
|தமிழ் சினிமாவின் அடுத்த தரமான நடிகர்கள் பட்டியலில் கவின் மற்றும் மணிகண்டன் இணைந்து விட்டதாக இயக்குநர் செல்வராகவன் டுவிட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.
சென்னை,
இயக்குநர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குநராக அறியப்படுபவர். குறிப்பாகக் காதல் கொண்டேன், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட படங்கள் எல்லா தரப்பினரும் ரசிக்கும் படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவை. பீஸ்ட், சாணிக் காயிதம், பகாசூரன், மார்க் ஆண்டனி என நடிப்பிலும் அசத்தி வருகிறார். அதுமட்டுமின்றி எக்ஸ் தளத்தில் அவ்வப்போது சில கருத்துக்கள் பதிவிட்டு வருவார். சில தத்துவங்கள் பதிவிடுவது மற்றும் நல்ல கலைஞர்களைப் பாராட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
மணிகண்டன் நடிப்பு மட்டுமின்றி வசனகர்த்தா மற்றும் உதவி இயக்குநராகவும் இருப்பவர். மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான குட்நைட் திரைப்படம் அளவுக்கு அனைவரையும் ஈர்க்கவில்லை என்றாலும் மணிகண்டனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
அதே போல கடந்த ஆண்டு கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அதைவிட பல மடங்கு சிறப்பாக ஸ்டார் படத்தில் கவின் நடித்திருந்தாலும் அந்த படம் அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும் அளவுக்கு இயக்குநர் இளன் இயக்கவில்லை என்கிற விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன.கவின் இயக்குநர் நெல்சனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கவின் மற்றும் மணிகண்டன் இருவரும் சிறந்த நடிகர்கள். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால் இருவருமே யதார்த்தமாகவும் உண்மைக்கு மிக நெருக்கமாகவும் நடித்து வருகின்றனர். எந்த விதமான கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் ஏற்று நடிக்கக் கூடிய திறமை இந்த இருவருக்குமே உள்ளது என்பது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் என செல்வராகவன் தனது பதிவில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
ஜீனியஸ் இயக்குநர் என அழைக்கப்படும் செல்வராகவனிடம் இருந்து இப்படி ஒரு வாழ்த்து கிடைத்துள்ள நிலையில், நடிகர் கவின் கண்டிப்பாக இதற்கு எந்தளவுக்கு உண்மையாக இருக்க முடியுமோ இருப்பேன் சார், ரொம்ப நன்றி என பதிவிட்டுள்ளார்.
மணிகண்டனும் செல்வராகவனின் பாராட்டை பார்த்து பூரித்துப்போய் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உங்கள் படம் தான் சார் எனக்கு ரொம்பவே இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளது என்றும் மணிகண்டன் கூறியுள்ளார்.