இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள்... சர்ச்சையில் சிக்கிய கங்கனாவின் 'எமர்ஜென்சி'
|இந்த படத்தை வருகிற ஜூன் 14ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளது.
சென்னை,
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இந்திரா காந்தியாக கங்கனா ரணாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதமே இதன் படப்பிடிப்பை நிறைவு செய்த கங்கனா, நவ. 24ம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார். சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில் இந்த படம் வருகிற ஜூன் 14ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த படம் குறித்து கங்கனா ரணாவத் பேசுகையில், 'சொத்துகள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை எடுத்து இருக்கிறேன். எமர்ஜென்சி இந்திய வரலாற்றின் இருண்ட அத்தியாயம். அதனை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம். ஒரு வரலாற்று நிகழ்வை படமாக்கியது மகிழ்ச்சி' என்றார்.
இந்நிலையில் இந்த படம் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த படத்தில் இந்திரா காந்தியை அவமதிக்கும் காட்சிகள் இருப்பதாக ஏற்கனவே காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். படம் ரிலீசாகும்போது எதிர்ப்பை தீவிரப்படுத்த அவர்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவதில் சிக்கல் உருவாகி உள்ளது.