4-வது முறையாக தனுசுடன் இணையும் பட நிறுவனம்
|4-வது முறையாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார்.
மூன்றாம் பிறை, பகல் நிலவு, ஜீவா, கிழக்குவாசல், இதயம், வேடன், எம்மகன், பாணா காத்தாடி, விவேகம், விஸ்வாசம் உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த படநிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ். இந்த நிறுவனம் தயாரித்த தொடரி, பட்டாசு, மாறன் ஆகிய 3 படங்களில் தனுஷ் ஏற்கனவே நடித்து இருக்கிறார்.
4-வது முறையாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்தப் படத்துக்கு, 'கேப்டன் மில்லர்' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். 'ராக்கி', 'சாணி காயிதம்' படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன், இந்தப் படத்தை இயக்குகிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் கூறும்போது, "டைரக்டர் அருண் மாதேஸ்வரன் எனக்கும், தனுசுக்கும் திரைக்கதையை விவரித்தபோது, நாங்கள் இரு வரும் உற்சாகமானோம். டைரக்டரின் சிந்தனை, திரைக்கதையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாசின் தனித்துவமான இசை, படத்தின் தரத்தை மேலும் உயர்த்தும்" என்றார்.