< Back
சினிமா செய்திகள்
நந்தன் படம் என்னை கண் கலங்க வைத்தது - சிவகார்த்திகேயன் பாராட்டு
சினிமா செய்திகள்

'நந்தன்' படம் என்னை கண் கலங்க வைத்தது - சிவகார்த்திகேயன் பாராட்டு

தினத்தந்தி
|
20 Sept 2024 3:59 PM IST

சசிகுமார் ‘நந்தன்’ படத்தில் மிகமிக எதார்த்தமாக உண்மைக்கு மிக நெருக்கமாக நடித்துள்ளார் என்று சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.

சென்னை,

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.

சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

'நந்தன்' படம் குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் புகழ்ந்து பேசியுள்ளார். இதை இயக்குநர் இரா.சரவணனன் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சிவகார்த்திகேயன் பேசியிருப்பதாவது: 'எனது அன்பு அண்ணன்கள் சசிகுமார், இரா.சரவணன் இணைந்து கொடுத்துள்ள அற்புதமான படம்தான் நந்தன். சசிகுமார் சார் புதியதாக வித்தியாசமாக எதாவது செய்திருப்பார் என நினைத்துதான் பார்த்தேன். முதல் காட்சியிலேயே பிரமிப்பாக இருந்தது. காட்சியை விளக்காமல் பொதுவாக சொல்கிறேன். நான் இதுவரை இந்தமாதிரி காட்சியை எந்த சினிமாவிலும் பார்த்ததில்லை. நான் அங்கேயே இந்தப் படம் வேறு மாதிரி ஏதோ சொல்லப்போகிறார்கள் என்பதைப் புரிந்துக்கொண்டேன். சசிகுமார் சார் எதார்த்தமாக நடிப்பார். இந்தப் படத்தில் மிகமிக எதார்த்தமாக உண்மைக்கு மிக நெருக்கமாக நடித்துள்ளார். அதிகமான இடங்களில் சிரித்தேன், கண் கலங்கினேன். கடைசியில் வேகமாக கை தட்டினேன். இதையெல்லாம் சாத்தியப்படுத்தியது இரா.சரவணனின் எழுத்தும் அவரது குழுவின் உழைப்பும்தான்' என்றார்.

மேலும் செய்திகள்