மீண்டும் படம் இயக்க வரும் சசிகுமார்
|சசிகுமார் சுப்பிரமணியபுரம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார்.
சசிகுமார் இயக்கி நடித்த சுப்பிரமணியபுரம் படம் 2008-ல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதில் நடித்த ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு மற்றும் கதாநாயகியாக வந்த சுவாதி கதாபாத்திரங்களை சிறப்பாக வடிவமைத்து இருந்ததாக பாராட்டுகள் கிடைத்தன.
கண்கள் இரண்டால் என்ற பாடலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. ஈசன் என்ற இன்னொரு படத்தையும் இயக்கினார். பின்னர் படம் இயக்குவதை கைவிட்டு தொடர்ந்து நடிக்க தொடங்கினார். பசங்க, சுந்தரபாண்டியன், தலைமுறைகள், போராளி, குட்டிப்புலி, தாரை தப்பட்டை, கிடாரி என்று மற்ற இயக்குனர்கள் படங்களில் கதாநாயகனாக நடித்தார்.
தற்போது சுப்பிரமணியபுரம் வெளியாகி 14 ஆண்டுகள் ஆன நிலையில் மீண்டும் படம் இயக்கப்போவதாக அறிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் சசிகுமார் வெளியிட்டுள்ள பதிவில், ''14 வருடங்களுக்கு முன்பு ஜூலை 4-ல் சுப்பிரமணியபுரம்' படம் வெளியானது. 14 வருடங்கள் போனதே தெரியவில்லை. சுப்பிரமணியபுரம் வெளியானதில் இருந்து இப்போதுவரை மக்கள் படத்துக்கு கொடுத்த ஆதரவை மறக்க மாட்டேன். விரைவில் நான் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன்" என்று கூறியுள்ளார்.