சசிகுமார், சிம்ரன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு
|சசிகுமார், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் 'ஈசன்' படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இறுதியாக வெளியான 'அயோத்தி' 'கருடன்' ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
சசி குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'நந்தன்' திரைப்படம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சசிகுமார் இதுவரை நாம் பார்த்திராத தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அயோத்தி திரைப்படக் கூட்டணி, 'நந்தன்' படத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிராம பஞ்சாயத்து தேர்தல் மூலம் ஏற்படும் சாதியக் கொடுமைகள் பற்றி நந்தன் திரைப்படம் அழுத்தமாக பேசியுள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
குட் நைட் படத்தினை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நடிகை சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று சசிகுமார், சிம்ரன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் இன்று பூஜையோடு தொடங்கியுள்ளது.