கார் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர்தப்பிய சர்வானந்த்
|பிரபல இளம் நடிகர் சர்வானந்த். இவர் தமிழில் நாளை நமதே, எங்கேயும் எப்போதும், ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார்.
சர்வானந்த் தற்போது கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பி உள்ளார். ஐதராபாத்தில் தனது ரேஞ்ச் ரோவர் சொகுசு காரில் சர்வானந்த் சென்று கொண்டு இருந்தார். பிலிம் நகர் சந்திப்பில் ஒரு பைக் குறுக்கே வந்தது. அதில் மோதாமல் இருக்க காரை திருப்பினார். அப்போது எதிர்பாராத விதமாக கார் தடுப்பு சுவரில் மோதியது.
இதில் சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரில் சர்வானந்த் குடும்பத்தினரும் இருந்ததாக கூறப்படுகிறது. போலீசார் விசாரிக்கிறார்கள். இது லேசான விபத்துத்தான். எல்லோரும் நலமுடன் இருக்கிறோம் என்று சர்வானந்த் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில்தான் சர்வானந்துக்கு ரக்ஷிதா ரெட்டி என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இன்னும் சில தினங்களில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் திருமணம் நடக்க உள்ளது. திருமண ஏற்பாடுகளில் குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சர்வானந்த் விபத்தில் சிக்கியதால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர்.