லாரியில் இருந்து விழுந்து பலியான அஜித் ரசிகர் குடும்பத்துக்கு சரத்குமார் நிதி உதவி
|லாரியில் இருந்து விழுந்து பலியான அஜித் ரசிகர் குடும்பத்துக்கு சரத்குமார் நிதி உதவி அளித்தார்.
அஜித்குமார் நடித்த 'துணிவு' படத்தை கோயம்பேடு பகுதியில் உள்ள தியேட்டரில் பார்க்க சென்ற பரத்குமார் என்ற ரசிகர் லாரியில் ஏறி நடனம் ஆடி கீழே குதித்தபோது முதுகுதண்டு உடைந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீவிர அஜித் ரசிகரான பரத்குமார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார். தாயாரும் கூலி வேலைக்கு செல்கிறார்.
கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று சென்னை திரும்பிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமாருக்கு இந்த தகவலை அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக சரத்குமார் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள பரத்குமார் வீட்டுக்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
இதுகுறித்து பரத்குமார் குடும்பத்தினர் கூறும்போது, ''சரத்குமார் ரூ.75 ஆயிரம் நிதி உதவி வழங்கி எங்களுக்கு ஆறுதல் கூறினார். பரத்குமார் சகோதரரின் 3 ஆண்டு கல்வி செலவை ஏற்பதாகவும், இந்த தொகுதியின் அமைச்சரான உதயநிதியின் கவனத்துக்கு தகவலை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்'' என்றனர்.